காவல் நண்பர்கள் குழு மூலம், மோசடி நிதி மற்றும் சீட்டு நிறுவனங்களை கண்டறிந்து, நடவடிக்கை எடுத்து, பொதுமக்கள் பணத்தை காப்பாற்றும் புதிய திட்டத்தை, பொருளாதார குற்றப்பிரிவு துவக்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் ஆங்காங்கே, நிதி மற்றும் சீட்டு நிறுவனங்களை துவங்கி, உரிய துறையில் அனுமதி பெறாமலும், அங்கீகாரம் இல்லாமலும், பல்வேறு கவர்ச்சித் திட்டங்களை அறிவித்து, மக்கள் சேமிப்பை தனதாக்கிக் கொள்ளும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.நாள் தோறும், மாநகர கமிஷனரகங்களிலும், மாவட்ட எஸ்.பி.,க்களிடமும் வரும் புகார்களே இதற்கு சாட்சி.
புகாரில் குறிப்பிட்ட தொகை அல்லது புகார்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட போலீஸ் கமிஷனரகத்தில் செயல்படும் மத்தியகுற்றப்பிரிவோ, அல்லது மாவட்ட எஸ்.பி., அலுவலகங்களில் செயல்படும், மாவட்ட குற்றப்பிரிவு விசாரிக்கும்.புகார்தாரர்கள் எண்ணிக்கையும்,மோசடி செய்யப்பட்ட முதலீட்டுத் தொகை அதிகரிக்கும் பட்சத்தில், பொருளாதார குற்றப்பிரிவிற்கு மாற்றப்படுகிறது.
மாவட்டம் தோறும் செயல்பட்டு வரும் பொருளாதார குற்றப்பிரிவு, இந்த குற்றங்கள் குறித்து விசாரித்து, மோசடி நிறுவனங்களின் சொத்தை முறைப்படி ஏலம் விட்டு, முதலீட்டாளர்களுக்கு பணம் வழங்கி வருகிறது. என்னதான் சீட்டு மோசடி, நிதி நிறுவன மோசடி என பத்திரிகை மற்றும், "டிவி'க்களில் செய்தி வந்தாலும், இன்னும் ஏமாறுபவர்களும், மோசடி நிறுவனங்களும் இருந்து கொண்டு தான் இருக்கின்றன.
இந்நிலையில், மோசடி நிறுவனங்களை கண்டுபிடிக்கவும், பொதுமக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும், பொருளாதார குற்றப்பிரிவில், தனியாக " போலீஸ் நண்பர்கள் குழு' அமைக்க, பொருளாதார குற்றப்பிரிவு, கூடுதல் டி.ஜி.பி., பிரதீப் வி பிலிப் உத்தரவிட்டார்.
இதையடுத்து மாநிலம் முழுவதும், அந்தந்த பகுதியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவின் முயற்சியில், விருப்பமுள்ளவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், வங்கி ஊழியர்கள், இளைஞர்கள் என, பலர் இணைந்துள்ளனர்.இவர்கள், அந்தந்த பகுதிகளில் அனுமதியின்றி சீட்டு மற்றும் நிதி நிறுவனங்கள் நடத்துபவர்கள், பங்குச் சந்தை முதலீடு என, அறிவிப்பவர்கள் குறித்த தகவலை பொருளாதார குற்றப்பிரிவிற்கு தெரிவிப்பர். அந்த தகவலின் அடிப்படையில், போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுப்பர்.
கடந்த, இரண்டு மாதங்களாக ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு, மாநிலம் முழுவதும் "போலீஸ் நண்பர்கள் குழு'வில் இணைந்தவர்களுக்கான முதல் கூட்டம், இம்மாதம், 4ம் தேதி நடந்தது. இக்கூட்டத்தில், கூடுதல் டி.ஜி.பி., பிரதீப் வி பிலிப், எஸ்.பி.,க்கள் ஆனி விஜயா, காமினி ஆகியோர் நண்பர்கள் குழுவைச் சேர்ந்தவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.
மேலும், பொருளாதார குற்றங்களை தடுக்க எடுக்க வேண்டிய முயற்சிகள், நிதி நிறுவனங்கள் பற்றிய விவரங்களை சேகரிக்கவும், பொதுமக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், பொதுமக்களும், காவல் நண்பர்களும் எளிதில் தகவல் தெரிவிக்கும் வகையில், "98405 84729' என்ற மொபைல் எண்ணும், "ஞுணிதீண்ஞிச்ட்ஞதண்tஞுணூ@ஞ்ட்ச்டிடூ.ஞிணிட், என்ற இ- மெயில் முகவரியும் அளிக்கப்பட்டுள்ளது.
டுவிட்டர், பேஸ்புக் மூலம், தமிழகம் முழுவதும், காவல் நண்பர்கள் குழுவினர் தெரியப்படுத்தி, பணத்தை இழந்தவர்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, பதிவு செய்து முறையாக நடத்தும் நிதி நிறுவனங்கள், முறையற்ற நிதி நிறுவனங்களின், 25 குணாதிசயங்களும், வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வகையில், கடந்த இரண்டு மாதங்களில் அதிகளவில் தகவல்கள் பொருளாதார குற்றப்பிரிவுக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல்கள் மீது போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.