திண்டுக்கல்
எந்த தவறும் செய்யாத அனைவரும் போலீசின் நண்பர்களே என்று கூடுதல் டி.ஜி.பி.பிரதீப் வி.பிலிப் பேசினார்.
போலீஸ் நண்பர்கள் விழா
திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலைய வளாகத்தில், போலீஸ் நண்பர்கள் இயக்கத்தின் 20–வது ஆண்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆர்.எல்.ஜெகன்னாதன் தலைமை தாங்கினார். சரக போலீஸ் டி.ஐ.ஜி. என்.அறிவுச்செல்வம் முன்னிலை வகித்தார். துணை ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் கூடுதல் டி.ஜி.பி.யும், போலீஸ் நண்பர்கள் இயக்கத்தின் நிறுவனருமான பிரதீப் வி.பிலிப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சிறப்பாக பணியாற்றிய போலீஸ் நண்பர்கள் குழுவினருக்கு பரிசுகளை வழங்கினார். முன்னதாக அவர் பேசியதாவது:–
போலீஸ் நண்பர்கள்
போலீஸ் துறைக்கு நான் வரும்போது எல்லோரையும் எனது குடும்பத்தினரும் பயந்தார்கள். நாட்டு பாதுகாப்புக்கு போலீஸ் தேவை. ஆனால், பொதுமக்களுக்கு போலீஸ் மீது வெறுப்பும், போலீசுக்கு மக்கள் மீதும் சந்தேகம் உள்ளது. போலீசுக்கு சாதாரண மக்கள் தான் உதவி செய்வார்கள்.
ஆனால், போலீசை பார்த்தால் மக்களுக்கு ஒருவித பயம் இருக்கிறது. போலீஸ், பொதுமக்களின் பாதுகாவலர்கள். போலீஸ் நண்பர்கள் இருந்தால் போலீசுக்கு உதவியாக இருக்கும். மக்கள் தான் போலீஸ் நண்பர்கள்., போலீஸ் நண்பர்கள் தான் மக்கள்.
தவறு செய்யாதவர்கள்
இந்த இயக்கத்தை தொடங்கும்போது இத்தனை பேர் சேர்வார்கள் என்று நினைக்கவில்லை. அப்போதைய முதல்–அமைச்சர் ஏற்றுக்கொண்டார்கள். இன்று அனைத்து மாவட்டங்களிலும் இயக்கம் உள்ளது. இந்தியா முழுவதும் தொடங்க திட்டம் இருக்கிறது.
நல்ல போலீஸ் அதிகாரிகளும் ஆசிரியர்கள் போன்றவர்கள் தான். நாட்டில் உள்ள எந்த குடிமகனின் ஒருதுளி ரத்தமும் மண்ணில் விழக்கூடாது என்பது தான் போலீசாரின் கடமையாக இருக்க வேண்டும். நமது வார்த்தை தான் சரியான குண்டு. துப்பாக்கியில் இருக்கும் குண்டுகள் உயிரை குடிக்கும்.
ஆனால், வார்த்தைகள் உயிரை வாழவைக்கும் சக்தி கொண்டவை. எந்தஒரு தவறும் செய்யாத மனிதர்கள் அனைவரும் போலீஸ் நண்பர்கள் தான். போலீஸ் நண்பர்கள் இயக்கத்தை நாட்டை நல்ல திசையில் மாற்றும் இயந்திரமாக மாற்ற வேண்டும்.
இவ்வாறு கூடுதல் டி.ஜி.பி. பிரதீப் வி.பிலிப் பேசினார்.
இதில் சிறப்பு புலனாய்வு போலீஸ் டி.ஐ.ஜி. ஜான்நிக்கல்சன், திண்டுக்கல் கலெக்டர் வெங்கடாசலம், போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், தொழில் வர்த்தகர் சங்க மாநில துணை தலைவர் மங்களம் சி.அழகு, நாட்டாண்மை காஜாமைதீன், கால்பந்து கழக செயலாளர் சண்கமுகம், 108 ஆம்புலன்சு மேலாளர் தணிகைவேல் முருகன், போலீஸ் நண்பர்கள் இயக்க மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் முருகேசன், பாலசுப்பிரமணி, கருப்பையா, தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போதை ஒழிப்பு தினம்
முன்னதாக நேற்று காலை திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, காவலர் நண்பர்கள் குழு மற்றும் ஆர்.வி.எஸ் பொறியியல் கல்லூரி சார்பில், கல்லூரி வளாகத்தில் போதை ஒழிப்பு தின விழா நடைபெற்றது. கல்லூரியின் செயலாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.
விழாவில் தமிழக போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. பிரதீப் வி.பிலிப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். முன்னதாக விழாவில் காவல்துறை நண்பர்கள் சார்பாக சிறப்பு மலரை கூடுதல் டி.ஜி.பி. பிரதீப் வி.பிலிப் வெளியிட்டார்.
திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி அன்புச்செல்வன், மாநில குற்றப்புலனாய்வு பிரிவு டி.ஐ.ஜி ஜான்நிக்கல்சன், திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன் ஆகியோர் விழாவில் பேசினர்.